இலங்கை வானொலி வரலாற்றில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வானொலி துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி அனைவரதும் விருப்பத்திற்குரிய வானொலியாக சூரியன் பண்பலை திகழ்ந்துக்கொண்டிருக்கிறது. தனியார் வானொலி சேவையான இது தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருப்பதோடு ஏனைய வானொலி சேவைகளுக்கு ஒரு முன்மாதிரியான சேவையை ஆற்றி வருவதையிட்டு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நேயர்களின் ரசனையறிந்து அவ்வப்போது தனது நிகழ்ச்சிகள் வாயிலாக பல்வேறு புதுமைகளை புகுத்தி தன்னகத்தே இலட்சக்கணக்கான நேயர் நெஞ்சங்களை தனதாக்கியிருக்கிறது.
அந்தவகையில் சூரியன் பண்பலையில் சனிக்கிழமை தோறும் காலை 8.00 மணிமுதல் 10.00 மணி வரை "மறுமுகம்" நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. குறுகிய காலத்தில் நேயர்களின் மனதை வென்ற ஒரு நிகழ்ச்சியாக அதனை குறிப்பிடலாம்.
அரசியல்வாதிகள், வாழ்நாள் சாதனையாளர்கள், நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் என எல்லோருடனும் இரண்டு மணி நேர சுவாரசியம் கலந்த கலந்துரையாடலே இந்நிகழ்ச்சியாகும். இதன் சிறப்பம்சம் யாதெனில் அரசியல்வாதியிடம் பேசும் பொது அரசியல் பற்றி பேசுவதில்லை. மாறாக அவர்களது வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்த பல சுவாரசியமான அனுபவங்களை வானலை வழியே பகிர்ந்துகொள்வார்.
குறிப்பாக ஒரு துறையினரிடம் காணப்படும் ஏனைய இதர திறமைகள் அனைவருக்கும் தெரிவதில்லை. அவைகளை வெளிக்கொணரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சூரியன் பண்பலையின் சிரேஷ்ட அறிவிப்பாளரான நவநீதனால் தொகுத்து வழங்கப்படுகிறது. இது முன்னதாகவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு இடையிடையே வைகைபுயல் வடிவேலுவினுடைய நகைசுவைகளையும் கலந்து நேயர்களுக்கு தெவிட்டாத வண்ணம் தொகுத்தளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் வெற்றி யாதெனில் குறுகிய காலத்தில் நேயர்களின் மனதை வென்றதோடு மட்டுமல்லாமல் ஏனைய ஊடகங்களும் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடாத்த ஆரம்பித்திருகின்றன. அத்தோடு அச்சித்துறையிலும் இது போன்ற பேட்டிகள் வருகின்றன.
வானலை வழியே நேயர்களின் இரசனையறிந்து புதுமைகளை புகுத்திவரும் சூரியன் பன்பலைக்கு ஒரு "சபாஷ்" போடலாம்.