ஐக்கிய நாடுகள் சர்வதேச நிறுவனமும், யுனெஸ்கோ கல்வி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் திகதியை உலக புத்தக தினமாக பிரகடனம் செய்துள்ளன. அதேபோல இலங்கை அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் வாசிப்பு வாரம், வாசிப்பு மதம் என அறிவிக்க தவறுவதில்லை. காரணம் எமது நாட்டின் எழுத்தறிவு வீதத்தினை தொடர்ந்து தக்க வைப்பதும், மக்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பதுமேயாகும்.
இந்த வாசிப்பு பழக்கமானது ஒருவருடைய பல்துறைசார் அறிவினை மேம்படுத்த உதவுகின்றது. வாசிப்பு கலாசாரம் என்பது ஒரு சாராரை மட்டும் சார்ந்தது அல்ல. இது சிறியோர் முதல் பெரியோர் வரை, அரிச்சுவடி படிப்போர் முதல் மேதைகள் வரை அனைவரிடமும் குடிகொண்ட விடயமாகும். இருப்பினும் இன்றைய நிலையில் அது குறைவடைந்து செல்வது குறித்து பல்வேறுபட்ட அமைப்புகள் அறிவுறுத்திக்கொண்டே வருகின்றன.
இருப்பினும் இலங்கையை பொருத்தமட்டில் இக்கலாசாரமானது ஏனைய பிரதேசங்களை விட மலையகத்தில் காணாமல் போய்கொண்டிருக்கிறது. பொதுவாக சின்னத்திரை, பெரியத்திரைகளின் ஆக்கிரமிப்புகள் இந்த வாசிப்பு கலாசாரத்தை விரட்டியடிக்கிறது எனலாம்.
வீதிக்கு பத்து வீடியோ காட்சிகள் விற்ப்பனை கூடங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஒரு புத்தக கடையை தேடினால் இருப்பது அரிதே. இந்த திரைப்படங்களை விற்கும் கடைகளில் கூடும் கூட்டம் புத்தக கடைகளில் இருப்பதில்லை. குறிப்பாக மலையக வீடுகளில் திரைப்பட தட்டுக்கள் (DVD, CD) வைக்க இடமிருக்காது. ஆனால் புத்தகங்கள் பற்றி சொல்ல தேவையில்லை.
நாடு அல்லது சமூகம் ஒன்றின் எழுத்தறிவு வீதத்தினை அளவிடும் அளவீடுகள், இடத்துக்கு இடம் வேறுபாட்டை காட்டக்கூடியன. இருப்பினும் பொதுவாக ஒரு சமூகத்தில் நாளாந்த செய்தித் தாள்களை வாசிக்கும் ஆற்றல் உடையவர்களின் சதவீதமானது அச்சமூகத்தின் எழுத்தறிவு வீதமாக உள்வாங்கப்படுகிறது. அப்படி பார்க்கின்றபோதிலும் அளவீடுகளின் அடிப்படையில் மலையகத்தில் நாளாந்த செய்தி தாள்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவே.
இன்றைய நிலையில் தகவல் சேகரிப்பும் தகவல் பரிமாற்றமுமே உலகை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில் சாதாரணமாக கணணி ஒன்றை இயக்கக்கூடிய தனி நபர் ஒருவருக்கும் தனது ஆற்றல் விருத்திக்கு வாசிப்பு முக்கியமானதாகும்.
மலையகத்தில் சிறந்த எழுத்தாளர்களும், அவர்களுடைய தரமான நூல்களும் வெளியாகின்றன. இருப்பினும் அதற்கான சிறந்த வரவேற்பும், முறையான சந்தைபடுத்தலும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் ஊக்கம் குறைவடைகின்றது. அதேபோல உலகவங்கி உள்ளிட்ட பல அமைப்புகள் பாடசாலைகளில் பல இலட்ச ரூபாய் செலவிலான நூலகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அது முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கான ஊக்குவிப்பு அடிமட்டத்திலிருந்து தருவிக்கப்படுவதில்லை. அதேபோல பொது நூலகங்களை நாம் பயன்படுத்துவது மிகவும் குறைவு.
பொது நூலகங்களில் தமிழ் நூல்கள் குறைவு தான். காரணம் நாம் தினசரி செய்தி தாள்களையே படிப்பதில்லை. இதில் புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாவதை விட இல்லாமல் இருப்பது மேல். பல குறைபாடுகள் இருப்பது நானும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை. எனினும் இருப்பவைகளை முறையாக பயன்படுத்தி முன் செல்லவேண்டும்.
இன்றைய இருபத்தொராம் நூற்றாண்டில் தேடல் என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய கல்வித்திட்டதுக்கமைய நூலகங்களும், கணணி இணையத்தளங்களும் இன்றியமையாதனவாகும். வாசிப்பு கலாசாரத்தை மேலோங்க செய்ய இதுவே அத்தியாவசியமான சாதனங்களாகும். இதன் குறைகள் நிவர்த்திக்கப்பட்டு வாசிப்பு கலாசாரம் மேலோங்க வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.
அருமையான கட்டுரை! வாசிப்பை மேம்படுத்துவோம்!
ReplyDeleteஉங்களது கருத்துக்கு நன்றி எஸ்.கே...
ReplyDelete