எம்மில் பலர் (இளைஞர்கள்) பாடசாலை கல்வி பெறுபேறுகள் தோல்வியடைந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணுவதுண்டு. ஒரு சாரார் விரக்தியடைவர். ஆனால் அதற்க்கு ஈடாக பல எமது வாழ்வின் ஏணிப்படியாக தொழிற்கல்வி இருப்பதை உணர்வதில்லை. அது தொடர்பாக தேடி அறிந்துகொள்வதிலும் நாட்டம் கொள்வதில்லை.
இன்றைய நிலையில் எமது நாட்டிலும் சரி, உலகிலும் சரி வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் வேலை வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள சிறந்ததொரு வழிமுறை தொழிற்கல்வி என்றால் மிகையாகாது.
இலங்கையில் இன்று பல தொழிற்கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் சிறப்பம்சம் யாதெனில் "இலங்கையும் - இலவசமும்" என்றொரு தலைப்பை வைக்ககூடிய அளவிற்கு இலவசமாகவும் தொழிற்கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. உலக நாடுகளில், குறிப்பாக தெற்காசியாவை பொறுத்தவரையில் எந்தவொரு துறையென்றாலும் சரி இலவசங்கள் குறைவு. ஆனால் அங்கு போட்டித்தன்மை அதிகம். பணம் செலுத்திஎனும் தமது தொழிற்கல்வியை பயின்று முன்னேறுவார்கள்.
ஆனால் எமது நாட்டில் இலவசமாக பல துறைகளிலும் தொழிற் பயிற்சிகள் இருந்தும்கூட அதனை எவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்வதில்லை. குறிப்பாக எமது சமூகமான மலையகத்தில் முழுமையாக இல்லை என்பது கவலைக்குரிய விடயமே.
எமது சமூகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளில் பெரும்பாலானோர் தமது பாடசாலை கல்வி முடிந்ததும் ஏனைய அனைத்துக்கும் "குட் பாய்" சொல்லிவிட்டு வெளியிடங்களுக்கு தாவி விடுகின்றனர். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்மிய பகுதுகளுக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இது ஒரு மரபுவழியாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதற்காக அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ குறை கூறுவதில் நியாயமில்லை.அவர்கள் வழிகாட்டிகள். நாம் தான் அதற்கான வழிமுறைகளை தேடி பயன்பெறவேண்டும். இருப்பினும் இதற்கான பூரண தெளிவு சமூக மட்டத்தில் ஏற்படவேண்டும்.தொழிற் வழிகாட்டல்கள் இன்று பலதரப்பட்ட ஊடகங்களின் வாயிலாக எடுத்து செல்லப்பட்டாலும் சமூகம் அக்கறை செலுத்த வேண்டும்.
பாடசாலை கல்வி முடிந்தவுடன் எதையாவது ஒரு தொழிலை செய்வதை விட அதையும் தாண்டி இந்த தொழிற்கல்வியை பயின்று எமக்கான ஒரு அடையாளத்தை தேடுவது சால சிறந்ததே.
எனவே சமூக விருத்தியோடு எதிர்காலத்திலாவது எமது இளைஞர், யுவதிகள் தொழிற் கல்வியால் தமக்கொரு அடையாளத்தை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.