சில சில மாற்றங்களோடும் புதிய வேகத்தோடும் இலங்கை அணி நாளைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இருபதுக்கு 20 போட்டி தொடரை கைப்பற்றிய இலங்கை ஒருநாள் தொடரையும் இலகுவாக கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் படுதோல்வியை சந்திக்கும் இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிட்டு வசைபாடினர் பலர். எனினும் புதிய பல வியூகங்களோடு மூன்றாவது போட்டியை வென்றெடுத்தது இலங்கை. என்ன நம்ம இலங்கை என்டா சும்மாவா???
இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை ICC தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை அடைந்தது. இருப்பினும் இந்த இரண்டாம் நிலையை தக்கவைக்கும் நிலை நான்காவது போட்டியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. அத்தோடு போட்டி தொடரை சமநிலை படுத்த பெரும்பாலும் இலங்கை முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஹம்பாந்தோட்டை மைதானம் பெரிதாக சுழல் பந்துக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக வேகப்பத்து வீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. இது தான் இலங்கையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. நாளை நடைபெறவுள்ள ஆர் பிரேமதாச மைதானம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமானது. எனவே இலங்கை வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இறுதியாக இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் உலககிண்ண போட்டி தொடரொன்றில் சந்தித்தன. இருப்பினும் அந்த போட்டி முடிவின்றி மழையினால் கழுவப்பட்டது. எனவே நாளைய போட்டி முடிவொன்று எய்த பிரார்த்திக்கலாம்.
இதுவரை நடந்த 03 போட்டிகளில்....
இலங்கை
லசித் மாலிங்க மூன்றாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதேபோல உபுல் தரங்க 111 ஓட்டங்களை குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களோடு சிறந்த கிரிக்கெட்டினை வழங்கும் சங்கா, வேகத்துக்கு டில்ஷான் மற்றும் மஹேல.இவர்களோடு சுழல் பந்து வீச்சாளர்களும் இணைந்துகொள்ளலாம்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் போல்லிங்கேர் (Bollinger) மாத்திரமே பந்து வீச்சில் மிரட்டுகிறார். இந்த தொடரில் மொத்தமாக 08 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவரோடு துடுப்பாட்டத்தில் பொன்டிங், வாட்சன், கிளார்க், மேக் ஹஸ்ஸி என கலக்குகின்றனர். இவர்களில் பொன்டிங் தவிர ஏனையோர் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. வாட்சன் முதல் போட்டியில் விலாசியதொடு சரி. ஏனையோர் பொண்டிங்கோடு சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கியவர்கள். இருப்பினும் இலங்கையின் சுழலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அணி எதிர்பார்ப்பு...
இலங்கை
இறுதியாக நடந்த போட்டியில் இலங்கை வென்றிருந்தாலும் எல்லோரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. எனவே பெரும்பாலும் சாமர சில்வா மற்றும் சந்திமால் வெளியேற்றபடலாம். மாறாக மூன்றாவது போட்டியில் விளையாடாத அஞ்சேலோ மேதீவ்ஸ் மற்றும் சுராஜ் ரண்டிவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க படலாம். இங்கிலாந்து பிராந்திய அணிகளோடு விளையாடி வரும் இலங்கை A அணிக்குலாமில் இருக்கும் சீக்குகே பிரசன்ன உடனடியாக இலங்கைக்கு அழைக்கப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் இருவர் மாத்திரமே பிரச்சினைக்குரியவர்கள். பிரட் ஹட்டின்!!! இவர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமாகும். இவர் பெரும்பாலும் அணியில் நீடிப்பார் என தோனுகிறது. காரணம் இவருடைய இடத்துக்கு இன்னொருவர் இல்லை என்பது. மற்றையவர் ஸ்டீவென் ஸ்மித்!!! இவர் சகலதுறை வீரர். ஆனால் தொடர்ச்சியாக தடுமாறுகிறார். எனவே இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜான் ஹஸ்டிங்க்ஸ் களமிறக்கப்படலாம்.
சுவாரஸ்ய தகவல்கள்
- குமார் சங்கக்கார தனது 300வது போட்டியில் விளையாடுகிறார். இலங்கையின் ஆறாவது வீரராக இவர் இந்த மைல் கல்லை எட்டுகிறார். வாழ்த்துக்கள் சங்கா!!!
- உபுல் தரங்க மேலும் ஒரு சதத்தை பெறுவாரானால் இலங்கையர் ஒருவரால் ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய சதங்கள் எனும் சனத் ஜெயசூரியாவின் சாதனையை சமப்படுத்துவார். சனத் 2006 ஆம் ஆண்டு ஐந்து சதங்களை பெற்றதே சாதனை.
- மைகில் கிளார்க் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற போட்டிகளில் தோல்வியடைந்ததே அதிகம். பாருங்கள்!! நாணய சுழற்சியில் வென்ற ஒன்பது போட்டிகளில் நான்கில் தோல்வி. மாறாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்த 21 போட்டிகளில் 03 போட்டிகளில் மாத்திரமே தோல்வி... \\\தலைமைகள் பலவிதம்.. அதில் இது ஒருவிதம்..///