ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு, உலகம் பூராகவும் பல்வேறு சர்வதேச தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஒவ்வொன்றும் எமது உலகம் எதிர்நோக்கும் பல்வேறுப்பட்ட சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி அதற்காக சமூகத்தை தெளிவுபடுத்தும் நோக்குடனும் அதற்கான தீர்வை சமூகத்தினூடாக பெற்றுக்கொள்வதுமே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில் உலகம் பூராகவும் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை கருத்தில் கொண்டு 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இத்தினத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை நெறிப்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களது வளமான எதிர்காலத்துக்கு வழிசமைப்பதாகும்.
இது ஒரு சில நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை நாம் ஊடகத்துறையின் வாயிலாக தலைப்புச் செய்தியிலேயே கேட்டு, பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும் எமது நாட்டை பொறுத்தவரையில் இது குறைவே.
அதனடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு தலைப்பு வெளியிடப்பட்டு அதனூடாக அவ்வருடத்தில் இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள் இடம்பெறுகின்றன. அப்படியே இவ்வருடத்துக்கான தலைப்பும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
"எமது வருடம் - எமது குரல் (Our Year - Our Voice)"
இது இக்காலக்கட்டத்தை பொருத்தமட்டில் ஒரு சிறந்த தலைப்பாகும். அதாவது நான் முதலில் குறிப்பிட்டது போல எமது கருத்துக்கு மதிப்பளித்து முன்னுரிமை வழங்கப்படுவதாகும். இதில் முக்கியமாக பல்வேறுபட்டவர்களின் பங்களிப்பினை நாம் கூறலாம்.
பொதுவாக வீட்டை பொருத்தமட்டில் எமது கருத்துக்களுக்கு மதிப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் அதற்கான சரியான வழிகாட்டல் கிடைப்பதில்லை. பணம் மட்டும் இளைஞனின் உயர்ச்சிக்கு வித்திடுவதில்லை. ஒரு சாராரின் கருத்து இதான். பணத்துக்கு என்ன செய்வது? இதனை விடுத்து அவர்களின் வழியில் விட்டு அவர்களை நெறிப்படுத்தி அவர்களது துறையில் வழிகாட்ட வேண்டும். அடுத்தவர்களை சுட்டிக்காட்டி குறை கூறுவதை தவிர்க்கவேண்டும்.
சமூகமானது இளைஞர்களின் நடத்தையை குறை கூறுவதை விடுத்து அவர்களை ஒரு முன்மாதிரியான சமூகமாக மாற்ற முன் வரவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ஒன்று கூடுவதை சமுதாயம் விரும்புவதில்லை. "தன் பிள்ளை" கெட்டு விடுமென்று பார்க்கிறவர்கள் அச்சமூகத்தின் இளைஞர்களை மதிப்பளித்து தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும். அவர்களது நடத்தை பிறழ்வுக்கு நேர்வழி காட்டி அவர்களுக்காய் துணிந்து குரல் கொடுக்கவேண்டும்.
இளைஞர் மன்றங்களை உருவாக்கி அவர்களிடையே கலாசார பின்னணியை புகுத்தி வன்முறையற்ற இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுக்கு சமுதாயத்தில் தலைமைத்துவ பொறுப்புகளை வழங்கி அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கவேண்டும். இளைஞர் மற்றும் முதியோரிடையே வலுவான புரிந்துணர்வை கட்டியெழுப்பி தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
பாடசாலை மற்றும் பல்கலைகழகங்களில் இளைஞர்களின் உறவினை வலுபடுத்த வேண்டும். பக்க சார்பற்ற விதத்தில் அவர்களை செயற்படுத்தவேண்டும். அவர்களது திறமைகளை வெளிகொணர்ந்து உலகின் முன்னிறுத்த வேண்டும்.
அரசானது மக்களின் அனுமதியுடன் சமூகத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள் இளைஞர்களின் ஊடாக எடுத்து செல்லப்படவேண்டும். அதில் பெரும்பாலும் அவர்களது பங்களிப்பு காணப்படவேண்டும். எமது கருத்துச் சுதந்திரம் மேலோங்கி காணப்படவேண்டும். அத்தோடு எமது கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அது பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த படவேண்டியது கட்டாயமேயாகும்.
இளைஞர்களுக்கான சிறந்த சமூதாய கட்டமைப்புகள் அரசினால் உருவாக்கிக் கொடுக்கப்படவேண்டும். அத்தோடு எம்மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் மற்றும் தவறான வழிகாட்டல்கள் ஒழிக்கப்படவேண்டும்.
இறுதியாக ஊடக துறையை பற்றி பார்த்தால், இவர்களது பங்களிப்பு எமக்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஒருவனின் சீரான செயற்ப்பாட்டிற்கும் அவனது தவறான செயட்பாட்டிட்கும் முக்கிய உந்து சக்தியாக செயற்படுவது இந்த ஊடகதுறையாகும்.
சமூக அமைப்புகள் அனைத்தும் இளைஞர்களின் அபிவிருத்திக்கும், ஒன்றுகூடலுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவர்களை தொடர்ச்சியாக ஒன்றித்து வைத்திருப்பதத்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
எமது சவால்களும் பிரச்சினைகளும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படவேண்டும். வெறுமனே களிப்பூட்டும் நிகழ்வுகளை விடுத்து காத்திரமான நிகழ்ச்சிகளை படைக்க வேண்டும். தொடர்ச்சியாக இளைஞர்களின் பிரச்சினைகளுக்காய் குரல் கொடுப்பதோடு, எம்மிடையே சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும் இதன் பொறுப்பாகும். அத்தோடு வெறுமனே பிரச்சினைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் அதற்கான தீர்வு திட்டங்களையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
இதுவே இவ்வருட இளைஞர் தினத்தில் ஒரு இளைஞனாய் எனது பார்வையும் வேண்டுகோளும்.
No comments:
Post a Comment