அண்மைகாலமாக இரத்தினபுரி மாவட்டத்தை உலுக்கி வரும் சம்பவம் தான் இது. இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் மர்ம கொலைகள், ஆட்கடத்தல் என்பனவாகும்.
திரைப்படங்களில் போன்று தினம் தினம் அதிர்ச்சிமிக்க சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக பெண்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆட்கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களின் சூத்திரதாரிகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் பீதியை கிளப்பிவிடுகின்றன.
கஹவத்தை, பெல்மதுளை, இறக்குவானை, இரத்தினபுரி மற்றும் தெனியாய ஆகிய பிரதேசங்களிலேயே இச்சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதேவேளை இருபதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களும் கொலையுண்டவர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலை செல்லும் மாணவி முதல் 81 வயது பாட்டி வரை இதில் உள்ளடங்குவர். பாடசாலை மற்றும் வேலைகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. மாலை வேளைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.
எங்கும் பீதியுடனேயே மக்கள் காணப்படுகின்றனர். இதேவேளை இக்கொலையாளிகள் கூறிய ஆயுதங்களால் குத்தியும் காடுகளை வெட்ட பயன்படுத்தப்படும் நீண்ட பிடியுடைய கத்திகளை கொண்டு வெட்டியும் கொலை செய்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஒரு பெண்ணின் கழுத்தை கடித்து கொலை செய்திருப்பதாகவும், இன்னொரு பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஆரம்பத்தில் பெரும்பான்மை மக்களிடத்தில் ஆரம்பிக்கப்பட்டு தோட்டங்களை மையப்படுத்தி கொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலையக மக்கள் கூட்டாக வாழும் இப்பிரதேசங்களில் ஒரே நேரத்தில் பல இடங்களில் இச்சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரவு நேரங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வந்த இக்கொலைச் சம்பவங்கள் தற்பொழுது பகலிலும் நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருக்கும் பெண்களின் கையை பிடித்திழுத்த சம்பவங்கள் இரண்டு தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்பது புதிராகவே உள்ளது. நன்கு பயிற்றப்பட்டவர்களே இவ்வாறு செயற்படுகிறார்கள். மக்களால் சுற்றி வலைக்கப்பட்டும் இவர்களை பிடிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர். இதுவரை மக்களால் மூவர் பிடிபட்டுள்ளனர். இதில் இரு கொலையாளிகள் கொலையுண்ட நிலையிலுள் ஒருவர் உயிருடனும் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் மனநிலை குன்றிய நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னரும் கொலைகளும் ஆட்கடத்தல்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தோட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. மக்கள் உறக்கமற்று பீதியுடன் இருக்க, இளைஞர்கள் இரவு நேரங்களில் ஊர் பாதுகாப்பிற்காக கண்விழித்து கிடக்கின்றனர். இதேவேளை இரவு வேளைகளில் மின்வெட்டு கொலையாளிகளுக்கு சாதகமாக அமைவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசுக்கு தெளிவுபடுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் கஹவத்தை நகரில் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து விசேட அதிரடி படையினரும், புலனாய்வு பிருவினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். தோட்டங்கள் தோறும் மூன்று பொலிசார் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment