தனது மாய சுழலினாலும், தனது மந்திர புன்னகையாலும் பல நூற்றுக்கணக்கான விக்கெட்டுகளையும் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொள்ளைகொண்டவர் முரளி. அவரைப்பற்றி இன்னொரு கட்டுரை வரைவதில் பெருமையே.
"எனது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்துவிட்டேன். இனி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை" என தனது ஓய்வின்போது தெரிவித்தார் முரளி. இது உண்மைதான்.அவரது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தகாரர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 1300 க்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் முரளி. அதுமட்டுமில்லாமல் அவரது சராசரி விகிதம் 337 ஒருநாள் போட்டிகளில் 23.07 ஆகவும், 133 டெஸ்ட் போட்டிகளில் 22.72 உம் ஆகும்.
அண்மையில் முரளி ஓய்வுபெற்ற போட்டியில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தால் 800 எனும் மைல் கல்லை எட்டலாம் என்ற இலக்கு முரளிக்கு இருந்தது. அத்தோடு அவர் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிருபித்து காட்டவேண்டிய கட்டாய நிலை ஏற்ப்பட்டது என்பது உண்மையே. காரணம் டேரல் ஹெயார் போன்ற விசமிகளின் வாயை மூடுவதற்காகவே.
அந்த 800 எனும் இமாலய இலக்கை முரளி எய்தாவிட்டால் என்னை போன்ற ரசிகர்களுக்கு பெரும் ஏக்கமாகவே அமைந்திருக்கும்.
கிரிக்கெட் உலகின் ஞான தந்தை என அழைக்கப்படும் சேர் டொனால்ட் பிரட்மன் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அவரது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சராசரி விகிதம் 99.94.
இவரது கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் நான்கு ஓட்டங்களை பெற்றால் சராசரி 100 ஆகியிருக்கும். அந்த நிலையில் தான் முரளியைபோல் அவரும் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அவர் தனது இறுதி போட்டியில் துரதிஷ்டமாக ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அவரால் அந்த மைல் கல்லை எட்டமுடியாமல் போனது.
இருப்பினும் பிரட்மன் போன்ற துடுப்பாட்ட வீரருக்கு நான்கு ஓட்டம் என்பது பெரிய விடயமல்லவே. ஆனால் முரளிக்கு அது ஒரு கடினமான ஒரு சவால்மிக்க இலக்கு எனலாம்.
இதற்கிடையில் மழை குறுக்கிட்டு ஒருநாள் முழுதும் மைதானம் கழுவப்பப்ட்டு போட்டி தடைப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலும் 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரட்மன் தவறவிட்டதை முரளி எட்டிபிடித்து சாதித்துவிட்டார்.
அன்று தனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய சேர் டொனால்ட் பிரட்மனுக்கு வழங்கப்பட்ட "சேர்" எனும் அதி சிறந்த பட்டம், இருவகை போட்டிகளிலும் வியத்தகு பல சாதனைகளை புரிந்து ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முரளிக்கும் வழங்கப்படுமா??? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல. கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புமாகும்.
பாகுபாடின்றி இவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில், ஒரு தமிழன் என்றவகையில் நாமும் பெருமிதம் கொள்ளல்லாம். முரளி உன் நாமம் வாழ்க.....