Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Wednesday, December 29, 2010

ICC உலககிண்ணம் 2011 ஒரு பார்வை (வீடியோ)

1996 ஆம் ஆண்டினை தொடர்ந்து இம்முறை 2011 ஆம் ஆண்டும் உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கு கிட்டியுள்ளது. இம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் இலங்கையும் இந்தியாவும் உள்ளடங்குகின்றன. அண்மைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இவ்விரண்டு அணிகளின் ஆதிக்கமும் மேலோங்கியவண்ணம் காணப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககிண்ண போட்டிகளில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவே ஆசிய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறவிருக்கும் போட்டிகளின் அட்டவணை, அணிகளின் பிரிவுகள், விளையாடப்படும் மைதானங்கள் மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான அறிமுக வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளன.

அறிமுக வீடியோ


விளையாடப்படும் மைதானங்கள்


அணிகளின் பிரிவுகள்


போட்டிகளின் அட்டவணை

Wednesday, December 22, 2010

பதிவுலக போட்டி (தேர்தல்) - 2010

அன்பான வாசகர்களே! தமிழ் இணைய திரட்டிகளில் ஒன்றான தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக வருடாந்தம் சிறந்த பதிவர்களுக்கான விருதுகளை வழங்கி ஊக்கமளித்து வருகின்றது.

அந்த வகையில் தமிழ்மணம் விருதுகள் 2010 க்காக முதல் முறையாக நிசான் ஆர்ச்சிவ்ஸ் (Nishan Archives) லிருந்து மூன்று பதிவுகள் களமிரக்கப்பட்டிருக்கின்றன என்பதை மகிவுடன் தெரிவித்துகொள்கிறேன். அந்த பதிவுகள் வருமாறு....

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்

பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்


இந்த போட்டி நீதியானதும் நேர்மையானதுமாக அமையவேண்டுமேன்பதே எனது விருப்பமாகும்! எனது பதிவினை ஒருமுறை வாசித்துவிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் அதற்குரிய வாக்கினை தமிழ்மணத்தில் அளியுங்கள். இப்போட்டியை நடாத்தும் தமிழ்மணத்துக்கும் இதில் பங்குபெறும் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

Wednesday, December 8, 2010

இலங்கையும் மழையும்

வீட்டிலிருந்து வெளியே போகும்போது அம்மா "குடை கொண்டு போகவில்லையா?" என்று உரக்க கத்துவது தினமும் நடக்கிறது தான். காரணம் இலங்கையின் காலநிலை அப்படி சீரற்று கிடக்கிறது. நாட்டின் பல பாகத்திலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகளில் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தொடர் மழை மற்றும் வெள்ளபெருக்கினால் இருபதுக்கும் மேற்ப்பட்டோர் இறந்துள்ளதாகவும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் காயமுற்றும் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை நம்ம பெருந்தலை மைதானத்தில் இடம்பெறவிருந்த கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

என்னதாங்க பண்ணுறது??? நம்ம நாட்டுல என்ன சரி விஷேசம் என்றதும் உடனே மழை வந்துருது....

அப்படிதான் பாருங்க நம்ம நாட்ட மீட்டப்போ (சொல்லிகிறாங்க) மழை பெய்தது. ஒரு பட்டாசு கொளுத்த விடலையே... (அவங்கள)

அப்புறம் பார்த்திங்கனா அந்த ஓராண்டு வெற்றிய நம்ம நாடே எதிர்பார்த்து இருந்துச்சி... ஏன் ஏற்பாடுகளும் தடால் புடாலா நடந்தது.. என்னாச்சி?? அப்பாவும் கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சி.... தள்ளி போட்டு தான் பண்ணினாங்க...

இதே மாதிரி தாங்க நம்ம தலைவரோட இரண்டாவது பதவியேற்பு நடக்க முதல்ல.... (ஐயோ.. ஐயோ...) பாராளுமன்றத்துக்குள்ள வெள்ளம் புகுந்து கலாட்டா பண்ணிருச்சி... 

பாவம் நம்ம அமைச்சர்களும் உறுப்பினர்களும்... இராணுவ வண்டியில போனத பார்த்து நானே பரிதாப பட்டேன்... (கைதி மாதிரி தானே)

அப்போ வடக்கு கிழக்குல ஒரே மழையா இருந்துச்சி.. இப்போ தென்னிலங்கையில ஒரே மழையா இருக்குதுங்க....நம்ம தலைவரும் கஷ்டபடுறாரு நம்ம நாட்ட ஆச்சரியமா பார்க்கணுமென்று... (இது வேற விதமா..) அபிவிருத்தி பண்ண விடுதில்லையே...

இப்படி தாங்க... நம்ம மக்களும் அத இத சொல்லி பொலம்புறாங்க....

நம்ம கிண்ணத்து தலைவரு (ஜெனரல்) உள்ள இருக்கதால தான் இப்படி மழை நிக்காம கொட்டுதுன்னு... ( இது உண்மைங்களா..) அப்போ 2003 - 2004 பருவ காலப்பகுதியில இங்க ஒரே வெயில் கொடுமைங்க.. இனி நாட்டுல பஞ்சம் தான் என்று சொன்னவங்களும் நம்ம மக்கள் தான்... ஆட்சி மாறினா எல்லாம் சரி ஆகுமுன்னு சொன்னவங்களும் இவங்க தான்... நீங்களே தான் சொல்லனுமுங்க...

நடப்பது நன்மைக்கே...!!! எனக்கு வேலை கிடக்குதுங்க...

Sunday, November 28, 2010

சூரியனின் மறுமுகம்

இலங்கை வானொலி வரலாற்றில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வானொலி துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி அனைவரதும் விருப்பத்திற்குரிய வானொலியாக சூரியன் பண்பலை திகழ்ந்துக்கொண்டிருக்கிறது. தனியார் வானொலி சேவையான இது தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருப்பதோடு ஏனைய வானொலி சேவைகளுக்கு ஒரு முன்மாதிரியான சேவையை ஆற்றி வருவதையிட்டு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேயர்களின் ரசனையறிந்து அவ்வப்போது தனது நிகழ்ச்சிகள் வாயிலாக பல்வேறு புதுமைகளை புகுத்தி தன்னகத்தே இலட்சக்கணக்கான நேயர் நெஞ்சங்களை தனதாக்கியிருக்கிறது.

அந்தவகையில் சூரியன் பண்பலையில் சனிக்கிழமை தோறும் காலை 8.00 மணிமுதல் 10.00 மணி வரை "மறுமுகம்" நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. குறுகிய காலத்தில் நேயர்களின் மனதை வென்ற ஒரு நிகழ்ச்சியாக அதனை குறிப்பிடலாம்.

அரசியல்வாதிகள், வாழ்நாள் சாதனையாளர்கள், நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் என எல்லோருடனும் இரண்டு மணி நேர சுவாரசியம் கலந்த கலந்துரையாடலே இந்நிகழ்ச்சியாகும். இதன் சிறப்பம்சம் யாதெனில் அரசியல்வாதியிடம் பேசும் பொது அரசியல் பற்றி பேசுவதில்லை. மாறாக அவர்களது வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்த பல சுவாரசியமான அனுபவங்களை வானலை வழியே பகிர்ந்துகொள்வார்.

குறிப்பாக ஒரு துறையினரிடம் காணப்படும் ஏனைய இதர திறமைகள் அனைவருக்கும் தெரிவதில்லை. அவைகளை வெளிக்கொணரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சி சூரியன் பண்பலையின் சிரேஷ்ட அறிவிப்பாளரான நவநீதனால் தொகுத்து வழங்கப்படுகிறது. இது முன்னதாகவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு இடையிடையே வைகைபுயல் வடிவேலுவினுடைய நகைசுவைகளையும் கலந்து நேயர்களுக்கு தெவிட்டாத வண்ணம் தொகுத்தளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் வெற்றி யாதெனில் குறுகிய காலத்தில் நேயர்களின் மனதை வென்றதோடு மட்டுமல்லாமல் ஏனைய ஊடகங்களும் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடாத்த ஆரம்பித்திருகின்றன. அத்தோடு அச்சித்துறையிலும் இது போன்ற பேட்டிகள் வருகின்றன.

வானலை வழியே நேயர்களின் இரசனையறிந்து புதுமைகளை புகுத்திவரும் சூரியன் பன்பலைக்கு ஒரு "சபாஷ்" போடலாம்.

Wednesday, October 27, 2010

இளைஞர்களின் வாழ்க்கை - தொழிற்கல்வி

எம்மில் பலர் (இளைஞர்கள்) பாடசாலை கல்வி பெறுபேறுகள் தோல்வியடைந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணுவதுண்டு. ஒரு சாரார் விரக்தியடைவர். ஆனால் அதற்க்கு ஈடாக பல எமது வாழ்வின் ஏணிப்படியாக தொழிற்கல்வி இருப்பதை உணர்வதில்லை. அது தொடர்பாக தேடி அறிந்துகொள்வதிலும் நாட்டம் கொள்வதில்லை.

இன்றைய நிலையில் எமது நாட்டிலும் சரி, உலகிலும் சரி வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் வேலை வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள சிறந்ததொரு வழிமுறை தொழிற்கல்வி என்றால் மிகையாகாது.

இலங்கையில் இன்று பல தொழிற்கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் சிறப்பம்சம் யாதெனில் "இலங்கையும் - இலவசமும்" என்றொரு தலைப்பை வைக்ககூடிய அளவிற்கு இலவசமாகவும் தொழிற்கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. உலக நாடுகளில், குறிப்பாக தெற்காசியாவை பொறுத்தவரையில் எந்தவொரு துறையென்றாலும் சரி இலவசங்கள் குறைவு. ஆனால் அங்கு போட்டித்தன்மை அதிகம். பணம் செலுத்திஎனும் தமது தொழிற்கல்வியை பயின்று முன்னேறுவார்கள்.

ஆனால் எமது நாட்டில் இலவசமாக பல துறைகளிலும் தொழிற் பயிற்சிகள் இருந்தும்கூட அதனை எவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்வதில்லை. குறிப்பாக எமது சமூகமான மலையகத்தில் முழுமையாக இல்லை என்பது கவலைக்குரிய விடயமே.

எமது சமூகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளில் பெரும்பாலானோர் தமது பாடசாலை கல்வி முடிந்ததும் ஏனைய அனைத்துக்கும் "குட் பாய்" சொல்லிவிட்டு வெளியிடங்களுக்கு தாவி விடுகின்றனர். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்மிய பகுதுகளுக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இது ஒரு மரபுவழியாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.


இதற்காக அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ குறை கூறுவதில் நியாயமில்லை.அவர்கள் வழிகாட்டிகள்.  நாம் தான் அதற்கான வழிமுறைகளை தேடி பயன்பெறவேண்டும். இருப்பினும் இதற்கான பூரண தெளிவு சமூக மட்டத்தில் ஏற்படவேண்டும்.தொழிற் வழிகாட்டல்கள் இன்று பலதரப்பட்ட ஊடகங்களின் வாயிலாக எடுத்து செல்லப்பட்டாலும் சமூகம் அக்கறை செலுத்த வேண்டும்.

பாடசாலை கல்வி முடிந்தவுடன் எதையாவது ஒரு தொழிலை செய்வதை விட அதையும் தாண்டி இந்த தொழிற்கல்வியை பயின்று எமக்கான ஒரு அடையாளத்தை தேடுவது சால சிறந்ததே.

எனவே சமூக விருத்தியோடு எதிர்காலத்திலாவது எமது இளைஞர், யுவதிகள் தொழிற் கல்வியால் தமக்கொரு அடையாளத்தை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Monday, October 18, 2010

வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம்

ஐக்கிய நாடுகள் சர்வதேச நிறுவனமும், யுனெஸ்கோ கல்வி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் திகதியை உலக புத்தக தினமாக பிரகடனம் செய்துள்ளன. அதேபோல இலங்கை அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் வாசிப்பு வாரம், வாசிப்பு மதம் என அறிவிக்க தவறுவதில்லை. காரணம் எமது நாட்டின் எழுத்தறிவு வீதத்தினை தொடர்ந்து தக்க வைப்பதும், மக்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பதுமேயாகும்.

இந்த வாசிப்பு பழக்கமானது ஒருவருடைய பல்துறைசார் அறிவினை மேம்படுத்த உதவுகின்றது. வாசிப்பு கலாசாரம் என்பது ஒரு சாராரை மட்டும் சார்ந்தது அல்ல. இது சிறியோர் முதல் பெரியோர் வரை, அரிச்சுவடி படிப்போர் முதல் மேதைகள் வரை அனைவரிடமும் குடிகொண்ட விடயமாகும். இருப்பினும் இன்றைய நிலையில் அது குறைவடைந்து செல்வது குறித்து பல்வேறுபட்ட அமைப்புகள் அறிவுறுத்திக்கொண்டே வருகின்றன.

இருப்பினும் இலங்கையை பொருத்தமட்டில் இக்கலாசாரமானது ஏனைய பிரதேசங்களை விட மலையகத்தில் காணாமல் போய்கொண்டிருக்கிறது. பொதுவாக சின்னத்திரை, பெரியத்திரைகளின் ஆக்கிரமிப்புகள் இந்த வாசிப்பு கலாசாரத்தை விரட்டியடிக்கிறது எனலாம்.

வீதிக்கு பத்து வீடியோ காட்சிகள் விற்ப்பனை கூடங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஒரு புத்தக கடையை தேடினால் இருப்பது அரிதே. இந்த திரைப்படங்களை விற்கும் கடைகளில் கூடும் கூட்டம் புத்தக கடைகளில் இருப்பதில்லை. குறிப்பாக மலையக வீடுகளில் திரைப்பட தட்டுக்கள் (DVD, CD) வைக்க இடமிருக்காது. ஆனால் புத்தகங்கள் பற்றி சொல்ல தேவையில்லை.
நாடு அல்லது சமூகம் ஒன்றின் எழுத்தறிவு வீதத்தினை அளவிடும் அளவீடுகள், இடத்துக்கு இடம் வேறுபாட்டை காட்டக்கூடியன. இருப்பினும் பொதுவாக ஒரு சமூகத்தில் நாளாந்த செய்தித் தாள்களை வாசிக்கும் ஆற்றல் உடையவர்களின் சதவீதமானது அச்சமூகத்தின் எழுத்தறிவு வீதமாக உள்வாங்கப்படுகிறது. அப்படி பார்க்கின்றபோதிலும் அளவீடுகளின் அடிப்படையில் மலையகத்தில் நாளாந்த செய்தி தாள்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவே.
இன்றைய நிலையில் தகவல் சேகரிப்பும் தகவல் பரிமாற்றமுமே உலகை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில் சாதாரணமாக கணணி ஒன்றை இயக்கக்கூடிய தனி நபர் ஒருவருக்கும் தனது ஆற்றல் விருத்திக்கு வாசிப்பு முக்கியமானதாகும்.

மலையகத்தில் சிறந்த எழுத்தாளர்களும், அவர்களுடைய தரமான நூல்களும் வெளியாகின்றன. இருப்பினும் அதற்கான சிறந்த வரவேற்பும், முறையான சந்தைபடுத்தலும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் ஊக்கம் குறைவடைகின்றது. அதேபோல உலகவங்கி உள்ளிட்ட பல அமைப்புகள் பாடசாலைகளில் பல இலட்ச ரூபாய் செலவிலான நூலகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அது முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கான ஊக்குவிப்பு அடிமட்டத்திலிருந்து தருவிக்கப்படுவதில்லை. அதேபோல பொது நூலகங்களை நாம் பயன்படுத்துவது மிகவும் குறைவு.

பொது நூலகங்களில் தமிழ் நூல்கள் குறைவு தான். காரணம் நாம் தினசரி செய்தி தாள்களையே படிப்பதில்லை. இதில் புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாவதை விட இல்லாமல் இருப்பது மேல். பல குறைபாடுகள் இருப்பது நானும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை. எனினும் இருப்பவைகளை முறையாக பயன்படுத்தி முன் செல்லவேண்டும்.

இன்றைய இருபத்தொராம் நூற்றாண்டில் தேடல் என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய கல்வித்திட்டதுக்கமைய நூலகங்களும், கணணி இணையத்தளங்களும் இன்றியமையாதனவாகும். வாசிப்பு கலாசாரத்தை மேலோங்க செய்ய இதுவே அத்தியாவசியமான சாதனங்களாகும். இதன் குறைகள் நிவர்த்திக்கப்பட்டு வாசிப்பு கலாசாரம் மேலோங்க வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.

Monday, October 11, 2010

காலம் மாறிவிட்டது : பெண்ணோட்டம்

என்னடா தலைப்பு இது, கண்ணோட்டம் தெரியும் ஆனால் இதென்ன பெண்ணோட்டம் என்று பார்க்கின்றீர்களா? பெண்களைப் பற்றி தான் சொல்ல போறேன். அப்பப்போ கலியுகமென்று பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் நமக்கு எல்லாமே ஜாலி தான்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஒரு காலத்தில் வீட்டடிமைகள் என சொல்லி விடுதலை தேடியவர்கள் பெண்கள். இவர்களின் விடுதலைக்காக இன்றும் போராடுகின்றனர். இவர்களின் நலன் கருதி ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை தொடர்ந்து மார்ச் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்படுகிறது. ஆனால் இவர்கள் எதிர் பார்க்கும் விடுதலை என்ன என்பது தான் புரியவில்லை.

இன்றைய பரந்துப்பட்ட உலகில் ஆண்களை விட பெண்களின் வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கிறது. ஒரு சில வளர்ந்த நாடுகளிலும், வளர்முக நாடுகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களிலும் பார்க்க அதிகமென்றே கூறலாம்.

எல்லா துறைகளிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள். இது ஓரிரு தசாப்தங்களுக்குள் ஏற்ப்பட்டிருக்கும் பெண்களின் ஒரு புரட்சியே தான். இருப்பினும் காலம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய ஒரு சில பெண்களின் போக்கு வருந்த தக்கதே. அத்தோடு தொழிநுட்ப வளர்ச்சியின் போக்கு இந்த நிலைப்பாட்டை இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதற்கு ஒரு உதாரணம் கூட சொல்லலாம்.
 
ஒரு சவர்க்கார விளம்பரத்துக்கு ஒரு ஆண் மார்போடு துணியை கட்டிக்கொண்டு நான்கு பக்கமும் மூடப்பட்ட அறையில் சவர்க்கரமிட்டு குளிப்பார். ஆனால் அதுவே ஒரு பெண் நீச்சளுடையோடு உச்சி மலையில் இருந்து ஆத௬ருக்குல் குதித்து நீராடுவாள். இதில் வேடிக்கையை பார்த்தீர்களா? ஜட்டியோடு ஆற்றில் துள்ளிக் குதித்து நீராட வேண்டிய ஆண் குளியலறையிலும், குளியலறையில் குளிக்க வேண்டிய பெண் நீச்சலுடையில் ஆற்றில் குளிப்பது போல காட்சி... கலியுகம்பா......!!

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவதென்றால் எத்தனை கேள்வி கணைகள்?? அனால் அந்த நிலை இன்று இல்லை தான். சுதந்திரம் என்பது முடக்கப்படுவது சிறந்ததல்ல. ஆனால் மனிதனுக்குள் ஒரு சில வரையறைகள் இருக்கிறது. அதனை மீறினால் என்ன செய்வது?

பொதுவாக ஆங்காங்கே பெண் அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள் இடம்பெறுகின்றன. அதற்க்கான கண்டன பேரணிகளும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அத்துமீறல்களால் ஆண்களை கண்டாலே தனியாக செல்லும் பெண்களுக்கு இன்றும் ஒருவிட பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே தலைகீழாக மாறுமானால்??

இப்படி தான் இன்றைய பத்திரிக்கையில் இடம்பெற்ற சுவாரசியமான (பத்திரிக்கையின்) செய்தி. ஜிம்பாப்வே நாட்டில் "பெண்களால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண்கள்" என்று செய்தி வந்திருக்கிறது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் எதிலெல்லாம் வளர்ச்சி கண்டு விட்டார்கள் பார்த்தீர்களா? போலீஸ் அதிகாரி முதல் அறுபது வயது பெரியவர் வரை விட்டு வைப்பதில்லையாம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த அறுபது வயது முதியவரை ஒரு இடத்தில் வைத்து தனது காரில் ஏற்றியிருக்கிறார்கள் மூன்று பெண்கள். அவரின் வீட்டில் இறக்குவதாக சொல்லி அவரை பாலியல் சேட்டை செய்து, அவரது வீட்டிலிருந்து 80 மைல் தூரத்தில் எறக்கி விட்டு சென்றிருக்கிறார்கள். எங்கே போய் சொல்வது?

அடுத்தது சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள் மூலம் நடக்கும் அட்டூழியங்கள். இதையெல்லாம் விட ஒரு கொடுமை போதைப் பொருளுக்கு அடிமையாகும் பெண்கள் ஏராளம். இப்படி ஏராளம் சொல்லி கொண்டே போகலாம். இதற்கு தீர்வு தான் என்ன???

Saturday, September 25, 2010

இதாங்க எந்திரன் படம் (வீடியோ காட்சிகள்)

இந்திய திரைப்பட வரலாற்றில் ஹாலிவுட் விட்ப்பனர்களை தமிழ் சினிமாவுக்கு திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு படம் என்றால் அது எந்திரன் தான்.ஹாலிவுட் சினிமாகாரர்களே நினைக்காத ஒன்றை தசாவதாரம் படம் காட்டியிருந்தது. அதனையும் தாண்டி மெகா பட்ஜெட்டில் (150 முதல் 175 கோடி) வெளிவரும் படம் எந்திரன். சங்கர் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. இவரது இலாபம் ஈட்டும் உத்தி எவருக்கும் தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.

அதிலும் இந்த படத்தின் கூட்டணியை பாருங்கள். நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய், பாடல்கள் வைரமுத்து மற்றும் இசை ஆஸ்கார் நாயகன் AR ரகுமான். இது தான் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டுவதற்கு காரணம்.

சரி இந்த படம் எப்படி இருக்கும். திரையரங்குக்கு போவதென்றால் இப்போ முடியாத காரியம். ஒரு மாதத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீந்திருக்கும். படம் பற்றிய ஒரு முன்னோட்டத்தை பாருங்களேன்.


அடுத்து பாடல்கள் பற்றி சொல்ல தேவையில்லை. அத்தனையும் சக்கை போடு போடுகின்றன. குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து வித்தியாசமான உத்திகளை இந்த என்திரனிலும் புகுத்தியிருக்கிறார் நம்ம AR ரகுமான். அதில் இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ.... என்ன பாட்டுய்யா....?? கலக்கிட்டாருல்ல. அதில் வரும் அத்தனை வரிகளும் ஒரு இந்திரனின் காதலை உணர்த்துகின்றது. காலங்கள் கானா காதல்.... கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு.... என் நீலப் பல்லாலே (Blue Tooth) உன்னோடு சிரிப்பேன்.... அந்த பாடலினுடைய வீடியோ காட்சியின் சிறு பகுதி பாருங்களேன்.


காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை... நியூட்டன் ஏலேக்ட்ரோன் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை.....என்னங்க இது அடுத்த பாடல். இந்த பாடலில் அழகு தேவதையை மேலும் அழகு படுத்தி காட்டியிருக்கிறார்கள். ரஜினியோ நம்ம சூர்யா மாதிரி கடற்கரையில ஆடுறாருங்க.. பாருங்களேன் இதையும்...


தமிழில் வரும் ஒரு ஹாலிவுட் ஆஸ்கார் படமென்று இந்திரனை குறிப்பிட்டால் மிகையாகாது. அந்தளவுக்கு தொழினுட்பம் புகுந்து விளையாடியிருக்கிறது. காட்சி அமைப்புகளும் சரி, அதற்கான பின்னணி இசையும் சரி பிரமிக்க வைக்கின்றது.

பாடல் வரிகள் அனைத்து இயந்திர மனிதனை உருக்கி வடித்திருக்கிறது. குறிப்பாக புத்துய மனிதா.. என்று தொடங்கும் பாடல் மனிதனை எலாம் அறிவை தட்டி எழுப்பியிருக்கிறது..

எந்திரன் நிச்சயம் தமிழ் சினிமாவில் தடம் பாதிக்கும்.

Monday, September 13, 2010

சூரியன் பண்பலையின் என்றென்றும் புன்னகை

உலக தமிழ் வானொலி வரலாற்றில் புதுமையை புகுத்தி தனக்கென ஒரு இடத்தை இன்றும் நிலை நிறுத்தி நிமிர்ந்த நடையில் பன்னிரண்டு வருடங்களை கடந்திருக்கும் ஒரு இலங்கையின் வானொலி தான் சூரியன் பண்பலை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வெற்றிநடை போடும் சூரியன் நேயர்களிடையே பல புதுமைகளை புகுத்தி அவர்களின் மனங்களை வென்று வருகின்றது. காலத்திற்கேற்றால் போல் தனது நிகழ்ச்சிகளை மாற்றி பல புதுமைகளை செய்து காட்டியிருக்கிறது. அந்தவகையில் தனது நேயர்களை மகிழ்வித்து வரும் வானொலியான சூரியன் பண்பலையானது தனது தரமான நிகழ்ச்சிகளால் ஏனைய வானொலிகளிடமிருந்து முன்னிக்கின்றது என்றால் மிகையல்ல. அதேபோல தனது நேயர்களின் இசைவாக்கத்திற்கு அமைவாக அவர்களின் விமர்சனங்களை உள்வாங்கி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.

இருபத்துநான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகி வரும் சூரியன் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு இடையில் வெவ்வேறுப்பட்ட நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்களால் தொகுத்தளிக்கப்படுகின்றன. சூரியனின் வெற்றிக்கு தரமான நிகழ்ச்சிகளோடு அதன் அறிவிப்பாளர்களின் சுவாரஸ்யமான உரையாடல்களுமே காரணமாகும்.

அந்தவகையில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிமுதல் இரவு 8.45 மணிவரை என்றென்றும் புன்னகை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அனைவரையும் கவர்ந்திழுத்த இவ்நிகழ்ச்சியானது சூரியன் பண்பலையின் முகாமையாளர் நவநீதன் மற்றும் அறிவிப்பாளர் சஹானா ஆகியோரால் தொகுத்து வழங்கப்படுகிறது.


ஆரம்பத்தில் நேயர்களை கவர்ந்திழுத்த இந்நிகழ்ச்சி தற்பொழுது அரு (றுக்கும்) வருக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. ஒரு அனுபவமுள்ள அறிவிப்பாளரின் நிகழ்ச்சி இவ்வாறு இருப்பது கவலைக்குரிய விடயமே.

காரணம் ஒரு நேயர் தொலைபேசியினூடாக அழைப்பினை மேற்கொள்ளும் போது, அவரை அழைப்பிலே காத்திருக்க செய்துவிட்டு அறிவிப்பாளர்கள் வாக்குவாதம் பிடித்துகொள்வதும், நேயரை கட்டாயபடுத்தி பாடவைப்பது மற்றும் விளம்பரங்களை பாடி கேட்பவர்களை அருவருக்க செய்து விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் நேயர்கள் அறிவிப்பாளர்கள் சொல்வதை செய்ய முடியாமல் திணருவதுமுண்டு. அவர்களை கட்டாயப்படுத்தி ஒரு விடயத்தை செய்ய வைப்பதென்பது முறையல்ல.

ஆரம்பத்தில் இசைசமர் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நேயர்களிடையே பிரபல்யப்பட்ட நவநீதன் இப்பொழுது இவ்வாறான நிகழ்ச்சிகளை வழங்குவது சூரியனின் தரத்தை குறைக்கக்கூடியதாகும். நேயர்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டியது அறிவிப்பாளர்களின் கடமை தான். என்றாலும் அதை பொருட்படுத்தவில்லை என்றால் நேயர்கள் ஏனைய வானொலிகளை கேட்க தொடங்கிவிடுவார்கள்.

எனவே இதை ஒரு விமர்சனமாக கொண்டு தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். இவ்வாறான விமர்சங்கள் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியே தவிர குறையல்லவே. மேலும் பல மெருகூட்டல்களோடு தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கும் ஒரு நேயன்.....

Sunday, August 15, 2010

இளைஞர் தினம் 2010 - ஒரு இளைஞனின் பார்வை

ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு, உலகம் பூராகவும் பல்வேறு சர்வதேச தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஒவ்வொன்றும் எமது உலகம் எதிர்நோக்கும் பல்வேறுப்பட்ட சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி அதற்காக சமூகத்தை தெளிவுபடுத்தும் நோக்குடனும் அதற்கான தீர்வை சமூகத்தினூடாக பெற்றுக்கொள்வதுமே இதன் நோக்கமாகும்.

அந்த வகையில் உலகம் பூராகவும் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை கருத்தில் கொண்டு 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இத்தினத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை நெறிப்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களது வளமான எதிர்காலத்துக்கு வழிசமைப்பதாகும்.

இது ஒரு சில நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை நாம் ஊடகத்துறையின் வாயிலாக தலைப்புச் செய்தியிலேயே கேட்டு, பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும் எமது நாட்டை பொறுத்தவரையில் இது குறைவே.

அதனடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு தலைப்பு வெளியிடப்பட்டு அதனூடாக அவ்வருடத்தில் இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள் இடம்பெறுகின்றன. அப்படியே இவ்வருடத்துக்கான தலைப்பும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

"எமது வருடம் - எமது குரல் (Our Year - Our Voice)"

இது இக்காலக்கட்டத்தை பொருத்தமட்டில் ஒரு சிறந்த தலைப்பாகும். அதாவது நான் முதலில் குறிப்பிட்டது போல எமது கருத்துக்கு மதிப்பளித்து முன்னுரிமை வழங்கப்படுவதாகும். இதில் முக்கியமாக பல்வேறுபட்டவர்களின் பங்களிப்பினை நாம் கூறலாம்.

பொதுவாக வீட்டை பொருத்தமட்டில் எமது கருத்துக்களுக்கு மதிப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் அதற்கான சரியான வழிகாட்டல் கிடைப்பதில்லை. பணம் மட்டும் இளைஞனின் உயர்ச்சிக்கு வித்திடுவதில்லை. ஒரு சாராரின் கருத்து இதான். பணத்துக்கு என்ன செய்வது? இதனை விடுத்து அவர்களின் வழியில் விட்டு அவர்களை நெறிப்படுத்தி அவர்களது துறையில் வழிகாட்ட வேண்டும். அடுத்தவர்களை சுட்டிக்காட்டி குறை கூறுவதை தவிர்க்கவேண்டும்.

சமூகமானது இளைஞர்களின் நடத்தையை குறை கூறுவதை விடுத்து அவர்களை ஒரு முன்மாதிரியான சமூகமாக மாற்ற முன் வரவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ஒன்று கூடுவதை சமுதாயம் விரும்புவதில்லை. "தன் பிள்ளை" கெட்டு விடுமென்று பார்க்கிறவர்கள் அச்சமூகத்தின் இளைஞர்களை மதிப்பளித்து தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும். அவர்களது நடத்தை பிறழ்வுக்கு நேர்வழி காட்டி அவர்களுக்காய் துணிந்து குரல் கொடுக்கவேண்டும்.

இளைஞர் மன்றங்களை உருவாக்கி அவர்களிடையே கலாசார பின்னணியை புகுத்தி வன்முறையற்ற இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுக்கு சமுதாயத்தில் தலைமைத்துவ பொறுப்புகளை வழங்கி அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கவேண்டும். இளைஞர் மற்றும் முதியோரிடையே வலுவான புரிந்துணர்வை கட்டியெழுப்பி தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

பாடசாலை மற்றும் பல்கலைகழகங்களில் இளைஞர்களின் உறவினை வலுபடுத்த வேண்டும். பக்க சார்பற்ற விதத்தில் அவர்களை செயற்படுத்தவேண்டும். அவர்களது திறமைகளை வெளிகொணர்ந்து உலகின் முன்னிறுத்த வேண்டும்.

அரசானது மக்களின் அனுமதியுடன் சமூகத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள் இளைஞர்களின் ஊடாக எடுத்து செல்லப்படவேண்டும். அதில் பெரும்பாலும் அவர்களது பங்களிப்பு காணப்படவேண்டும். எமது கருத்துச் சுதந்திரம் மேலோங்கி காணப்படவேண்டும். அத்தோடு எமது கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அது பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த படவேண்டியது கட்டாயமேயாகும்.

இளைஞர்களுக்கான சிறந்த சமூதாய கட்டமைப்புகள் அரசினால் உருவாக்கிக் கொடுக்கப்படவேண்டும். அத்தோடு எம்மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் மற்றும் தவறான வழிகாட்டல்கள் ஒழிக்கப்படவேண்டும்.

இறுதியாக ஊடக துறையை பற்றி பார்த்தால், இவர்களது பங்களிப்பு எமக்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஒருவனின் சீரான செயற்ப்பாட்டிற்கும் அவனது தவறான செயட்பாட்டிட்கும் முக்கிய உந்து சக்தியாக செயற்படுவது இந்த ஊடகதுறையாகும்.

சமூக அமைப்புகள் அனைத்தும் இளைஞர்களின் அபிவிருத்திக்கும், ஒன்றுகூடலுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவர்களை தொடர்ச்சியாக ஒன்றித்து வைத்திருப்பதத்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

எமது சவால்களும் பிரச்சினைகளும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படவேண்டும். வெறுமனே களிப்பூட்டும் நிகழ்வுகளை விடுத்து காத்திரமான நிகழ்ச்சிகளை படைக்க வேண்டும். தொடர்ச்சியாக இளைஞர்களின் பிரச்சினைகளுக்காய் குரல் கொடுப்பதோடு, எம்மிடையே சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும் இதன் பொறுப்பாகும். அத்தோடு வெறுமனே பிரச்சினைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் அதற்கான தீர்வு திட்டங்களையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

இதுவே இவ்வருட இளைஞர் தினத்தில் ஒரு இளைஞனாய் எனது பார்வையும் வேண்டுகோளும்.

Sunday, August 8, 2010

ஆக்கிரமிக்கும் எக்ஸ்புளோரர் - போட்டிக்கு ப்ளாக்பெரி

இது என்ன சம்பந்தமே இல்லாத தலைப்பாக இருக்கிறதேன்னு பார்ப்பிங்க. தலைப்பு எதோ முரணானதுதான். ஆனால் சொல்ல வந்த விடயத்தை பாருங்களேன்.

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலக இணைய உலாவிகளில் மீண்டும் தன்னை முன்னிலை படுத்தியிருக்கிறது. சந்தையில் மொசில்லா பாயர்பாக்ஸ் மற்றும் சத்தமில்லாது வந்து புரட்சியை ஏற்படுத்திய கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆகியவற்றை புறந்தள்ளியிருக்கிறது.

இதேவேளை அண்மைய கணிப்புகளின் புதிய இணைய அறிக்கைகளின்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் சந்தை பங்கானது கடந்த மாதமளவில் 0௦.42 % ஆல் அதிகரித்திருப்பதோடு அதன் மொத்த பங்கு 60.32% த்தில் இருந்து  60.74% ஆக உயர்ந்துள்ளது.

அதற்கு போட்டியாக இருக்கும் மொசில்லா பாயர்பாக்ஸ் இன் பங்கு 0௦.9% ஆல் குறைந்து அதன் தற்போதைய மோந்த பங்கு 23.81% இல் இருந்து 22.91% ஆக மாறியிருக்கிறது. அதேபோல் கூகுள் குரோமின் பங்கும் ௦0.08% ஆல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதன் பங்கானது 7.24% இல் இருந்து 7.16% ஆக குறைந்திருக்கிறது.

இந்நிலையில் சபாரி மற்றும் ஒபேரா ஆகியன தனது சந்தை பங்கினை உயர்த்திருக்கின்றன. சபாரி 4.85% இல் இருந்து 5.09% ஆகவும், ஒபேரா 2.27% இல் இருந்து 2.45% ஆகவும் உயர்ந்துள்ளது.


மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இணைய உலாவியாக "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8" காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவித்திருக்கின்றன. இதேவேளை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 9 ஆம் பதிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கபடுகிறது. ஆனால் அதற்கு இணையாக மொசில்லா பாயர்பாக்ஸ் இன் நான்காம் பதிப்பும் வெளிவரவிருக்கிறது. இதன்போது பலமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

ப்ளக்பெரி

இன்றைய நிலையில் கையடக்க தொலைபேசிகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றமை எல்லோருக்கும் தெரியும். இது இல்லாத வீடு இல்லை எனலாம். அதுவும் அண்மைய கருத்துக்கணிப்பில் எமது நாட்டின் சனத்தொகை அடிப்படையில் நூற்றுக்கு எண்பத்தெட்டு சதவீதமானவர்களிடம் தொலைபேசி பாவனை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெற்காசிய நாடுகளில் முதலிடமாகும். இதில் இரண்டாவது பாகிஸ்தான் (58%), இந்தியா (50%) ஆகும்.

இவ்வாறு கையடக்க தொலைபேசிச் சந்தையில் அதிகரித்து வரும் போட்டி தன்மையில் நாளுக்கு நாள் கையடக்க தொலைபேசிகளின் உற்பத்தி, திறன் மற்றும் தொழிநுட்பங்கள் ஆகியவற்றோடு போட்டித்தன்மையும் அதிகரித்து காணப்படுகின்றது.

இதில் "ஐபோன்" வகை தொலைபேசிகளின் ஆதிக்கமானது மேலோங்கி காணப்படுகிறது. இதன் பாவனையும், தொழிநுட்பப திறனும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. இதற்கு இணையாக பல தொலைபேசிகள் இருந்தும் இதன் இடம் அவைகளிடமிருந்து முதன்மையாக இருக்கிறது.

இந்நிலையில் தான் "பிளக்பெரி டோர்ச் 9800" என்ற புதிய கையடக்க தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் மூன்றாவது தொடு திரையை (Touch Screen) கொண்ட உற்பத்தியாகும். அத்தோடு இது மேல் நோக்கி தள்ளக்கூடிய "ஸ்லைட் அப்" அமைப்பினை கொண்ட முதல் பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் வசதிகள்
  • அதி நவீன இயங்குதளம் (OS 06)
  • 05 Mega Pixel கேமரா மற்றும் வீடியோ வசதி
  • 3G, Wi-Fi வசதி, GPS வசதி
  • 8GB சேமிப்பு வசதி மற்றும் 32GB வரையிலான சேமிப்பு வசதி அதிகரிப்பு (Expendaple Memory)
  • 3.2" திரையை கொண்டது
இன்னும் பல வசதிகளையுடைய இந்த கையடக்க தொலைபெசியானது ஐபோனுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, July 30, 2010

முரளிக்கு "சேர்" பட்டம் வழங்கப்படுமா?

தனது மாய சுழலினாலும், தனது மந்திர புன்னகையாலும் பல நூற்றுக்கணக்கான விக்கெட்டுகளையும் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொள்ளைகொண்டவர் முரளி. அவரைப்பற்றி இன்னொரு கட்டுரை வரைவதில் பெருமையே.

"எனது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்துவிட்டேன். இனி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை" என தனது ஓய்வின்போது தெரிவித்தார் முரளி. இது உண்மைதான்.அவரது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தகாரர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 1300 க்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் முரளி. அதுமட்டுமில்லாமல் அவரது சராசரி விகிதம் 337 ஒருநாள் போட்டிகளில் 23.07 ஆகவும், 133 டெஸ்ட் போட்டிகளில் 22.72 உம் ஆகும்.

அண்மையில் முரளி ஓய்வுபெற்ற போட்டியில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தால் 800 எனும் மைல் கல்லை எட்டலாம் என்ற இலக்கு முரளிக்கு இருந்தது. அத்தோடு அவர் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிருபித்து காட்டவேண்டிய கட்டாய நிலை ஏற்ப்பட்டது என்பது உண்மையே. காரணம் டேரல் ஹெயார் போன்ற விசமிகளின் வாயை மூடுவதற்காகவே.

அந்த 800 எனும் இமாலய இலக்கை முரளி எய்தாவிட்டால் என்னை போன்ற ரசிகர்களுக்கு பெரும் ஏக்கமாகவே அமைந்திருக்கும்.

கிரிக்கெட் உலகின் ஞான தந்தை என அழைக்கப்படும் சேர் டொனால்ட் பிரட்மன் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அவரது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சராசரி விகிதம் 99.94.

இவரது கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் நான்கு ஓட்டங்களை பெற்றால் சராசரி 100 ஆகியிருக்கும். அந்த நிலையில் தான் முரளியைபோல் அவரும் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அவர் தனது இறுதி போட்டியில் துரதிஷ்டமாக ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அவரால் அந்த மைல் கல்லை எட்டமுடியாமல் போனது.

இருப்பினும் பிரட்மன் போன்ற துடுப்பாட்ட வீரருக்கு நான்கு ஓட்டம் என்பது பெரிய விடயமல்லவே. ஆனால் முரளிக்கு அது ஒரு கடினமான ஒரு சவால்மிக்க இலக்கு எனலாம்.

இதற்கிடையில் மழை குறுக்கிட்டு ஒருநாள் முழுதும் மைதானம் கழுவப்பப்ட்டு போட்டி தடைப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலும் 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரட்மன் தவறவிட்டதை முரளி எட்டிபிடித்து சாதித்துவிட்டார்.

அன்று தனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய சேர் டொனால்ட் பிரட்மனுக்கு வழங்கப்பட்ட "சேர்" எனும் அதி சிறந்த பட்டம், இருவகை போட்டிகளிலும் வியத்தகு பல சாதனைகளை புரிந்து ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முரளிக்கும் வழங்கப்படுமா??? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல. கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புமாகும்.

பாகுபாடின்றி இவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில்,  ஒரு தமிழன் என்றவகையில் நாமும் பெருமிதம் கொள்ளல்லாம். முரளி உன் நாமம் வாழ்க.....

Tuesday, July 27, 2010

இலங்கை மூன்றாமிடம்

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும், அதனை தொடர்ந்துமல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சாதனை வீரனின் சாகசங்களை தொடர்ந்து, இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.


இதேவேளை ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததை தொடர்து அதன் சர்வதேச இடம் ஆட்டம் கண்டிருக்கிறது. இந்திய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியை தொடர்ந்து இலங்கை அணி ICC யினால் வெளியிடப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரப்படுத்தலில் ஆஸ்திரேலியா அணியை புறம்தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இது இலங்கை அணி சுழல் மன்னனின் பிரியாவிடைக்கு இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து அளித்த பரிசாகவும் நாம் கருதலாம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக அசைக்க முடியாத ஒரு அணியாக ஆஸ்திரேலியா அணி வளம் வந்தது. சிறப்பான வெற்றிகள், தொடர்ச்சியான தொடர் மற்றும் போட்டி வெற்றிகள் என தனது இடத்தை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக முதலிடத்தை தக்கவைத்திருந்தது.

இருப்பினும் அதன் இருப்பிடம் தொடர்ச்சியாக ஆட்டம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதற்கு சிறந்த உதாரணமாக ICC யினால் வெளியிடப்படும் தரவரிசையை குறிப்பிடலாம்.


இந்நிலையில் தொடர்ச்சியாக இந்திய அணி (124) முதலாம் இடத்திலும், இரண்டாம் இடத்தில் தென் ஆப்ரிக்கா (120), மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா (116), நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியாவை விட ஒரு புள்ளி குறைவாக இலங்கை (115), ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து (108), ஆறாம்,ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் இடங்களில் முறையே பாகிஸ்தான் (84), நியூசிலாந்து (80), மேற்கிந்திய தீவுகள் (77) மற்றும் பங்களாதேஷ் (9) ஆகிய அணிகள் இருக்கின்றன.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியை தொடர்ந்து ஒரு சில மாற்றங்கள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது.



இந்நிலையில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கை அணியை பொறுத்தவரையில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடக்கம் சாதனை, வெற்றியாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நம்பிக்கை துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அவர் பெற்றுக்கொண்ட சத (நூறு) பிரதியானது ஒரு சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் SSC மைதானத்தில் பெற்றுக்கொண்ட அதி கூடிய சதமாக மாறியது.

இதேவேளை இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார தனது ஏழாவது இரட்டைச் சதத்தை இன்றையதினம் பூர்த்தி செய்தார். பிரக்யன் ஓஜாவினுடைய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விலாசியதொடு 199 ஓட்டத்துக்கு வந்த சங்கா 7 வது இரட்டைச் சதத்தை கடந்தார்.


இன்றைய போட்டியில் சுழல் மன்னன் முரளியின் ஓய்வை தொடர்ந்து அஜந்தா மென்டிஸ் இணைக்கப்பட்டுள்ளதோடு லசித மலிங்க காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டில்ஹார பெர்னாண்டோ சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, July 23, 2010

சாதனையின் சிகரம், தன்னிகரற்ற வீரன் முரளி

இன்று எம் எல்லோருடைய மனமும் பூரித்திருக்கும் ஒரு நாள். எல்லோரும் பிரார்த்தித்த ஒரு நாள். தொலைகட்ச்சி பெட்டி முன்னாலும், வானொலி பெட்டி முன்னாலும் உணவு மறந்து அமர்ந்திருந்த நாள். இவாறு பலவற்றையும் நனவாக்கிய திருநாள். என்னடா இப்படி சொல்லுராநேனு பார்க்கலாம். ஆனால் தலைப்பு ஒன்றே போதும். ஆம் உலகின் நட்சத்திரம், சுழல் மன்னன், சாதனை நாயகன், இலங்கையின் கோடை, தமிழனின் பெருமை முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கும் பொன்நாள்.


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முரளிக்கு பிடித்த காலி மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியானது இவ்வருடத்தில் இலங்கை ஆடிய முதல் டெஸ்ட் போட்டியும் முரளியின் இறுதி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

போட்டியின் ஆரம்பத்தில் 792 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த முரளி யாரும் எதிர்பாராத வகையில் தனது டெஸ்ட் போட்டிகளின் ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அனைவரது விமர்சனங்களும் ஏன் முரளி முதல் போட்டியிலேயே விலக வேண்டும்? அவரால் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்க முடியுமா என பலதரப்பட்ட வகையில் வெளிப்பட்டிருந்தன. ஆனால் இன்று உலகு முழுதும் மக்களை மகிழ்வித்து வான்வரை புகழ் பூக்க வைத்திருக்கிறார் முரளி.

எந்த ஒரு வீரரும் தன விடை பெறப்போகும் கடைசி போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்றே எண்ணுவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் சாதகமாக அமைவதில்லை. ஆனால் அது எம்மவர் சுழல் ஜாம்பவானுக்கு சாதகமாக அமைந்தமை எல்லோருக்கும் சந்தோசமே. இதில் நாமெல்லாம் பெருமிதம் கொள்ளவேண்டிய ஒரு விடயம், உலகின் பல சாதனைகளுக்கு சொந்தகாரர்கள் தமிழர்கள் என்றால் மிகையாகது. அவ்வரிசையில் எம்மவர் முரளியும் தனது முத்திரையை கிரிக்கெட் உலகில் பதித்திருக்கிறார். எனவே இவர் தாய் மண்ணுக்கும், தாய் மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

தற்பொழுது இவரின் புகழ் பாடாத ஊடகங்களே இல்லை எனலாம். இலங்கையில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் பத்திரிக்கைகள் பலதும் இதனை முன்பக்க செய்தியாகவும், ஒரு சில தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டிருக்கின்றன. அத்தோடு வானொலிகள் மற்றும் தொலைகாட்சிகள் முரளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி (ஒலி) பரப்புகின்றன.

இதில் சிறப்பம்சம் யாதெனில் முரளி மைதானத்துக்கு வரும்போது செங்கம்பளம் விரித்து வரவேட்க்கப்பட்டதொடு, 799 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த தருணம் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக மைதானம் சென்று வாழ்த்தியதோடு நினைவு கேடயம் வழங்கி வாழ்த்தியிருந்தார்.


இனி இவரை பற்றி பார்த்தால் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி கண்டியில் பிறந்த இவர் கண்டி புனித அந்தோனி கலூரியில் படித்தார். கல்லூரி வாழ்க்கையில் மித வேகப்பந்து வீச்சாளரான இவர் பின்னர் இடது பக்க சுழல் பந்துவீச்சாளராகவும் அதன் பின்னர் வலது பக்க சுழல் பந்து வீச்சாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார்.

1992 ஆம் ஆண்டு அவுஸ்திரலிய அணிக்கெதிரான போட்டியிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளிலும், 337 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள முரளி முறையே 800, 515 ஆகிய அதிகூடிய விக்கெட்டுகளுக்கு சொந்தகாரர். இதுமட்டுமல்லாது ஆசிய பதினொருவர், சென்னை சூப்பர் கிங்க்ஸ், ICC உலக பதினொருவர், கந்துரட்ட, கென்ட், லன்ஷியர், தமிழ் யூனியன் ஆகிய முதல் தர கிரிக்கெட் அணிகளில் விளையாடி வருகின்றார்.

அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்சில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் அவரது இறுதி போட்டியோடு சேர்த்து 67 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் 22 ஆகும். இவைகளும் முரளியின் உலக சாதனைகளுள் ஒன்றாகும்.

மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதோடு இதில் நூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை இங்கிலாந்து (112), இந்தியா (105), தென்னாபிரிக்கா (104) ஆகிய அணிகளுக்கேதிராக வீழ்த்தியிருக்கிறார்.


கிரிக்கெட் விடுத்து பலதரப்பட்ட சமூக சேவைகளை முரளி ஆற்றி வருகின்றமையும் வியந்து கூறத்தக்கது. அதில் குறிப்பாக இலகை 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமான வீடுகளை அமைத்து கொடுத்தமை குறிப்பிடலாம். முரளி உன் பனி தொடரட்டும்.

இவரின் இந்த பயணத்தில் பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் இருந்தும் மனம் தளராத முரளி வீறுகொண்டு சாதனைகள் பல படைத்திருக்கின்றமையை அனைவரும் வியந்து பாராட்ட வேண்டும்.

தன்னிகரற்ற சுழல் பந்துவீச்சாளராக கிரிக்கெட் உலகில் உலக சாதனைகள் பல படைத்து பெருமை சேர்த்து கொண்டிருக்கும் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் அப்புகழ் என்றும் மங்காது. அதே போல் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகும் பொது உன் புகழ் இன்னும் உச்சத்தில் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. முரளிக்கு நிகர், இணை வேறு ஒருவருமில்லை என்பதே உண்மை.

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits